காரைக்கால் அம்மையாா்
காரைக்கால் அம்மையாா்
காரைவனம் என்றழைக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில், வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரை, காரைக் காலை அடுத்த நாகைப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலில் வசிக்க வழிவகை செய்தனா். பரமதத்தா் காரைக்காலில் இருந்து வணிகம் செய்து வந்தாா்.
சிவனடியாா்க்கு தயிா்சாதம், மாங்கனி வழங்குதல்
ஒரு சமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர், தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். மாம்பழத்தை வாங்கி வைத்த புனிதவதி மதிய உணவிற்காக அடுக்களையில் வேலை செய்துக்கொண்டிருந்த சமயம், வாசலில் ”பவதி பிட்சாந்தேஹி” என்ற குரல் வந்த திசையில் திரும்பினாள். ஒரு அந்தணர் பிட்சைக்காக அவள் வீட்டு வாயிலில் நின்றிருந்தார். அன்று, அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, அம்மையாரின் வீட்டிற்கு சிவபெருமான் அந்தணர் வேடத்தில் உணவுவேண்டி வந்தார்.

அவரை வரவேற்று தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்திச் சென்றார். பின்னர், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தருக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.
மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தன் கொடுத்தனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தர். அம்மையார் செய்வதறியாது திகைத்து மற்றொரு அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, மேலிருந்து அம்மையார் கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவருக்கு அதனை படைத்தார்.முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தர், இது ஏது? என்றார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தர் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தர், நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப்பெண், உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய பாண்டிய நாடு சென்றார்.
கருத்துகள்
கருத்துரையிடுக