முதல் தற்கொலைப்படைப் போராளி குயிலி
முதல் தற்கொலைப்படைப் போராளி குயிலி
அதை பெற்றுக்கொண்ட குயிலி அந்த ஓலையை படித்துப் பார்த்தபோது, அதில் நாச்சியாரின் போர் தந்திரங்களும், நுட்பங்களும் அதில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வேலு நாச்சியாரை கொல்வதற்கு சதி வேலை அரங்கேறியதை உணர்ந்தார். உடனே எதையும் யோசிக்காமல் சிலம்ப ஆசிரியர் அறைக்குச் சென்று அவரை வெட்டி வீழ்த்தினார். பின்னர் தான் அந்த ஓலையை வேலுநாச்சியாரிடம் கொடுத்தார். தனக்கு எதிரான சதி வலையில் இருந்து தன்னை காத்த குயிலியை மெய்க்காப்பாளராக நியமித்துக் கொண்டார் அரசி வேலுநாச்சியார். பின்னர், தனது பெண்கள் படையான உடையாள் படைக்கு தளபதியாக குயிலியை நியமித்தார்.
குயிலியின் சபதம்
வேலுநாச்சியாரை சிறைபிடிக்க ஆங்கிலேயர்கள் பலப் பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரை நெருங்குவதற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் குயிலி. எனவே குயிலியை தீர்த்துக்கட்ட ஆங்கிலேயர்கள் நேரம் பார்த்துக் காத்திருந்தனர். அதேசமயம், ஆங்கிலேயப் படையை சிவகங்கை மண்ணை விட்டு விரட்டி, வேலுநாச்சியாரை பாதுகாக்க சபதம் பூண்டார் குயிலி.
சிவகங்கை அரண்மனையில் ஆங்கிலேயர்கள், நவீன ஆயுதங்களையும் கருமருந்து பொட்டலங்களையும் வெடிபொருள் மூட்டைகளையும் வாங்கிக் குவித்திருந்த தகவல் குயிலிக்கு கிடைத்தது. அதன் மூலம் வேலுநாச்சியாரை முடித்துக் கட்டி, சிவகங்கை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டிருந்த தகவலும் கிடைத்தது. எப்படியாவது ஆயுதக்கிடங்கை அழித்துவிடவேண்டும் என்று முடிவு செய்தார் குயிலி.
தன் உயிா் நீத்த குயிலி
விஜயதசமி அன்று அரண்மனை ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆங்கிலேயப் படையில் உள்ளூர் வீரர்களும் இருந்ததால் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், விருப்பாச்சியில் இருந்து கிளம்பிய வேலுநாச்சியாரின் படையில் இருந்து பொதுமக்கள் போல உள்ளே நுழைந்தது குயிலி தலைமையிலான உடையாள் படை. சரியான நேரம் பார்த்து, 'வெற்றிவேல்! வீரவேல்' என்று குயிலி முழங்கியதும் வீரப்பெண் படை வெள்ளையர்களின் கழுத்துகளை வெட்டி வீசியது. ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேயத் தளபதி, ஆயுதங்களை எடுத்து பிரயோகிக்க உத்தரவிட்டது தான் தாமதம், ஆங்கிலேயப் படை ஆயுதங்களை எடுக்க ஓடியது. அப்போது விளக்குக்கு ஊற்றும் எண்ணெயை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தன் உடலில் தீவைத்துக்கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்தார் குயிலி. ஆங்கிலேயர் குவித்து வைத்திருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் சாம்பலாகின.
வெள்ளையர்களை வேலுநாச்சியாரின் படை வீரர்கள் அழித்தொழித்தனர். குயிலியின் தியாகத்தால் சிவகங்கைச் சீமை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்கப்பட்டது. உலகின் முதல் தற்கொலைப்படைப் போராளியாக, இந்திய விடுதலைப் போருக்கு தன் இன்னுயிரை ஈந்த குயிலி, சிவகங்கை மக்களால் இன்றும் கொண்டாடப்படுகிறார். முத்துப்பட்டியில், வீரத்தாய் குயிலியை நினைவுகூரும் வகையில், தீப்பாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் அமைந்துள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் வீரத்தாய் குயிலியின் நினைவுச் சின்னமும் உள்ளது. சிவகங்கை அரண்மனையின் முன் வைக்கப்பட்டிருக்கும் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையின் கீழ் குயிலி பற்றிய குறிப்பு ஒன்று உள்ளது. அந்தக் குறிப்பில், வேலு நாச்சியார் குயிலியின் துணைகொண்டு ஆங்கிலேயப் படையின் வெடிமருந்துக் கிடங்கை அழித்தது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக